Friday, March 17, 2017

இனிப்பு ஆபத்தானது

இனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் முறைகள் சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே  மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற  தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால், இத்தனை பழிகளும் சர்க்கரைக்கே. சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிற வெல்லத்தில்  பெரிய வில்லங்கம் எதுவும் இல்லை!

இன்னமும் கிராமப்புறங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் கருப்பட்டியும் சேர்த்தே எடுத்துக் கொள்கிறார்கள்.  வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது.  அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி  செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

சர்க்கரை சேர்த்துக் கொள்வதால் வரக்கூடிய ‘அசிடிட்டி’ எனப்படுகிற அமிலம் சுரக்கும் பிரச்னை, வெல்லம் சேர்த்துக் கொள்வோருக்கு வருவதில்லை.  ரத்தத்தையும் சுத்தப்படுத்தக் கூடியது. எனவே, டயட்டீஷியன்களின் அட்வைஸ் எப்போதும் வெல்லம்தான்! வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில்  இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச்  சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது.

வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை. வெல்லம் என்று பொதுவாக நாம் சொல்வது கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்படுவது. பனைமரத்திலிருந்தும்  வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாற்றிலிருந்துதான் வெல்லம் மற்றும் சர்க்கரை கிடைக்கின்றன. தண்ணீர்  பசையின்றி, கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்புச் சாற்றை காய்ச்சும் போது, கெட்டி வெல்லமாகும்  பதத்துக்கு முன்பே இறக்கப்படுகிற இளம்வெல்லமானது, மருந்துத் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பனைமரச் சாற்றை, குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி பனம் சர்க்கரையும் பனை வெல்லமும் தயாரிக்கிறார்கள். பனைவெல்லம் பசியைத் தூண்டும்.  முழுக்க சுத்தப்படுத்தாத கெட்டியான கருநிற வெல்லத்தை கருப்பட்டி என்றும், சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரையை  பனங்கற்கண்டு என்றும் சொல்கிறோம். பாலில் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிக் குடித்தால் சளி முறியும். உடல் சூட்டையும் குறைக்கும். வெல்லத்தைவிட, பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி12 சத்துகள் உள்ளன.

கரும்பில் இல்லாத சத்துகள் இவை. ருமாட்டிக் பெயின் எனப்படுகிற மூட்டு வலிக்கு முக்கிய காரணமே அசிடிட்டிதான். அது மட்டுமின்றி, தசை வலி,  மூட்டு இணைப்புகளில் வலி இருப்போருக்கும் சர்க்கரை வேண்டாம்  என்றும், அதற்குப் பதில் வெல்லம் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

எப்படியெல்லாம் கொடுக்கலாம்?
ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற கஞ்சி மாதிரியான உணவுகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக்  கொடுக்கலாம்.  3 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு உடைத்த கடலை, வேர்க்கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்துச் செய்து தரலாம். ஜூஸ்  போன்றவற்றில் சர்க்கரை சேர்த்தால், கலோரி அதிகமாகும். அதைத் தவிர்த்து வெல்லம் சேர்த்துத் தரலாம்.

பெண்களுக்கு எல்லாக் கட்டங்களிலும் இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் தேவை. இவை மூன்றையும் உள்ளடக்கியது வெல்லம்.  பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுத்தங்களி கொடுப்பது இதனால்தான். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம்  கூட்டாமல், அதே நேரம் உடலுக்கு வலு கொடுக்க, என்ன இனிப்பு கொடுத்தாலும், அதில் வெல்லம் சேர்த்துச் செய்வதே சிறந்தது. கர்ப்ப காலத்தில்  சில பெண்களுக்கு உடல் அதிக சூடாகி, பொய் வலி வரும்.

அது நிஜ வலியா, பொய் வலியா என்பதுகூடத் தெரியாது. அப்போது, பனங்கற்கண்டும் தனியாவும் சேர்த்து கஷாயம் வைத்துக் கொடுத்தால், பொய்  வலியாக இருந்தால் உடனே சரியாகும். தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கால்சியம்மற்றும் இரும்புச் சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும் வெல்லமே  சிறந்தது. பிரசவத்துக்குப் பிறகு, பெண்களின் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை அகற்ற, கருஞ்சீரகமும் கருப்பட்டியும் சேர்த்துச் செய்த  உருண்டையைப் பிரசவ மருந்தாகக் கொடுப்பதுண்டு.

அதைக் கொடுத்தால் உடனே ரத்தப்போக்கு உண்டாகி, அழுக்கெல்லாம் வெளியேறும். மெனோபாஸ் காலகட்டத்திலும் அதைத் தொடர்ந்தும்  சர்க்கரையைக் குறைத்துக் கொள்வதே பாதுகாப்பானது. குடும்பப் பின்னணியில் யாருக்குமே நீரிழிவு இல்லாவிட்டாலுமே இன்று அது 40  பிளஸ்சிலேயே பலரையும் தாக்குகிறது. எனவே, எல்லோரும் சர்க்கரையைத் தவிர்த்து வெல்லத்துக்கு மாறலாமே!

No comments:

REIKI MASTERS

REIKI MASTERS